கடவுள் வாழ்த்து வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த மா பூதத்தின் வைப்பு எங்கும், ஊனும் உயிரும் உணர்வும்போல், உள்ளும் புறத்தும் உளன் என்ப - கூனும் சிறிய கோத்தாயும் கொடுமை இழப்ப, கோல் துறந்து, கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன். கூனும் - கூனியாகிய மந்தையும்; சிறிய கோ தாயும் - இளைய பட்டத்து அரசியும் தாயுமாகிய கைகேயியும்; கொடுமை இழைப்ப- தனக்குப் பொல்லாங்கு செய்ய ; கோல் துறந்து - அரசாட்சியை நீத்து; கானும்கடலும் கடந்து - காட்டையும் கடலையும் தாண்டிச் சென்று ; இமையோர் இடுக்கண்தீர்த்த - (இராவணனைக் கொன்று) தேவர்களின் துன்பத்தை கிழங்கெடுத்த ; கழல்வேந்தன் - வீரக்கழலை அணிந்த இராமபிரானே ; வரம்பு இகந்த - எல்லைகடந்து பரந்த ; மா பூதத்தின் வைப்பு எங்கும் - பெரிய பூதங்கள் ஐந்தினால்ஆகிய உலகத்தில் உள்ள பொருள்கள் எல்லாவற்றிலும் ; ஊனும் உயிரும் உணர்வும் போல்- உடலும் உயிரும் போலவும் உடலும் உணர்வும் போலவும் ; உள்ளும் புறத்தும் உளன்என்ப - அகத்தேயும் புறத்தேயும் நிறைந்திருக்கின்றான் என்று ஞானிகள் கூறுவர். இப்பாட்டு இராமாயணச் சுருக்காய் இருப்பது மூலப் பகுதியிலிருந்தும் தோன்றிய உலகத்தில் உள்ள பொருள்களின் உள்ளேயும் வெளியேயும் நிறைந்திருக்கும் பரம்பொருளேஇராமனாக அவதரித்தான் என்பது கருத்து. இழிந்து என்னும் வினையெச்சம் இகந்த என்னும் பெயரெச்சவினைகொண்டு முடிந்தது. ‘வானின்று இழிந்து வரம்பு இகந்த வைப்பு’ என்றும், ‘மாபூதத்தின் வைப்பு’என்றும் இயைத்துப் பொருள் கொள்க. வானிலிருந்து காற்றும், காற்றிலிருந்து நெருப்பும்,நெருப்பிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றியது என்னும் மறை முடிபினையொட்டி‘வானின்றிழிந்து....... வைப்பு’ என்றார். உணர்வு - ஆன்மாவின் பண்பாய் வெளிப்பட்டு நிற்கும் அறிவு. இறைவன் பொருள்களுக்குஉள்ளே உடம்புக்குள் உயிர் இருப்பது போலவும், வெளியே உயிரில் உணர்வு வெளிப்பட்டு இருப்பதுபோலவும் இருக்கிறான் என்பார் ‘ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறத்தும் உளன் என்ப’ என்றார். பரம்பொருள் உயிர்களைத் தனக்கு உடம்பாகக் கொண்டு தான் உள்ளேயும், உயிர்களுக்குஉடம்பாக அமைந்து தான் புறத்தேயும் உள்ளான் என்பது சமய நூற் கொள்கையாதலின் இவ்வாறுகூறினார் என்க. எங்கும் - முற்றும்மை. ஊன், கூன், கொடுமை, கோல், கழல், வேந்து - ஆகுபெயர்கள். |