தயரதன் மந்திராலோசனை மண்டபத்தை அடைதல் கலிவிருத்தம் 1314. | மண்ணுறு முரசுஇனம் மழையின் ஆர்ப்புற, பண்ணுறு படர் சினப் பரும யானையான், கண்ணுறு கவரியின் கற்றை சுற்றுற, எண்ணுறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான். |
பண்உறு படர்சினம் பரும யானையான் - ஒப்பனை செய்யப்பட்ட மிக்கசீற்றத்தையும் கழுத்து மெத்தையையும் உடைய பட்டத்து யானையையுடைய தசரதன் ; மண்உறுமுரசு இனம் - மார்ச்சனை அமைந்த முரசங்களின் தொகுதி ; மழையின் ஆர்ப்பு உற- மேகங்களைப் போல முழங்கவும் ; கண் உறு கவரியின் கற்றை - காண்பவர்கண்ணில் அழகினால் நிற்கும் கவரிமானின் மயிர்க் கற்றையால் அமைந்த சாமரை; சுற்று உற - சூழ்ந்து வரவும்; எண் உறு சூழ்ச்சியின் இருக்கை -ஆராய்வதற்குப் பொருத்தமாகிய மந்திராலோசனை மண்டபத்தை; எய்தினான் - அடைந்தான். கவரி - சமரம் என்னும் மானின் வால் மயிரைக் கொண்டு செய்யப்பட்டஅரச அடையாளங்களுள் ஒன்று. பருமம் - யானைமேல் அரசர் இருத்தற்கு அமைக்கப்படும் இருக்கை.இதனைக் கலனை என்றும் கல்லணை என்றும் கூறுவர். மண் - மார்ச்சனை. கண்உறு என்பதற்கு விளக்கம்பொருந்திய என்றும் பொருள் கூறலாம். 1 |