வசிட்டன் வருகை  

1316.சந்திரற்கு உவமை செய் தரள வெண்குடை
அந்தரத்தளவும் நின்று அளிக்கும் ஆணையான்,
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த, தன்
மந்திரக் கிழவரை, 'வருக' என்று ஏவினான்.

     சந்திரற்கு உவமை செய் - சந்திரனுக்கு உவமையாக்குதற்கு உரிய ;
தரளம் வெண்குடை - முத்துகளால் அலங்கரிக்கப்பட்ட வெண்ணிறக்
கொற்றக் குடையானது ; அந்தரத்து அளவு நின்று - விண்ணுலகம் வரை
நிற்க ; அளிக்கும் ஆணையான் - காவல் புரியும் ஆணைச் சிறப்புடைய
தசரதன் ; இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த- தேவர் தலைவனான
இந்திரனுக்கு வியாழ பகவானை ஒத்த ;  தன் மந்திரக் கிழவரை- தன்
ஆலோசனைச் சுற்றத்தவரை ;  வருக என்று ஏவினான் - வருக என்று
கட்டளையிட்டான்.

     சந்திரனைப் போன்ற வெண்கொற்றக்குடை என்று சந்திரனை
உவமையாகச்சொல்லாமல் சந்திரனுக்கு உவமையாகச் சொல்லத்தக்க
வெண்கொற்றக் குடை என்றது குடையின்ஏற்றத்தைக் குறித்தது. இது
ழுதீதிலா வடமீனின் திறம் இவள் திறம்ழு என்பது போன்றது ; எதிர்நிலை
யுவமையணி ஆகும். தயரதன் குடை அந்தரத்து அளவு நின்று அளித்தமை.
அவன் சம்பராசுரனைவென்று தேவலோகத்தை இந்திரனுக்கு அளித்ததனால்
விளங்கும். இமையவர் குரு - வியாழபகவான் ; பிருகஸ்பதி - மந்திரக்
கிழவர் - அமைச்சர், புரோகிதர் முதலானோர். நின்று - செய்தெனஎச்சம்
செயவென் எச்சமாகத் திரிந்தது.                                   3