1320.காலமும் இடனும் ஏற்ற
     கருவியும் தெரிந்து கற்ற
நூல் உற நோக்கி, தெய்வம்
     நுனித்து, அறம் குணித்த மேலோர் ; 
சீலமும், புகழ்க்கு வேண்டும்
     செய்கையும், தெரிந்துகொண்டு,
பால்வரும் உறுதி யாவும்
     தலைவற்குப் பயக்கும் நீரார் ;

     ஏற்ற காலமும் இடனும் கருவியும் தெரிந்து - வினை செய்தற்குத்
தக்ககாலத்தையும் இடத்தையும், அதற்குரிய கருவிகளையும் அறிந்து ; கற்ற
நூல் உற நோக்கி
- தாம் படித்த அரச நீதி நூல்களின் கருத்துகளோடு
ஒப்பிட்டுக் கண்டு ;  தெய்வம்நுனித்து - தெய்வத்தையும் தியானித்து ; 
அறம் குணித்த மேலோர்- அரசியல்அறத்தைப் பெருக்கிய மேலோர்கள்;
சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் -ஒழுக்கத்தையும் புகழ் அடைவதற்குரிய செயல்களையும் ;  தெரிந்துகொண்டு -
ஆராய்ந்து அறிந்துகொண்டு ;  பால் வரும் உறுதி யாவும் - அவ்
வாராய்ச்சிகளின் பயனாக வரும் நற்பயன்கள் யாவற்றையும் ;  தலைவற்குப்
பயக்கும்நீரார்
- தம் அரசனுக்குக் கொடுக்கின்ற தன்மையுடையவர்கள்.

     இதனால் அமைச்சர்கள் பணிபுரியும் வகை உரைக்கப்பட்டது. இடன் -
கடைப்போலி. நுனிதல் - நுட்பமாக அறிதல். பால்வரும் உறுதி - அந்த
அந்தப் பகுதிகளால்விளையும் நன்மை.

    கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்ட தமைச்சு

    அருவினை என்ப உளவோ கருவியான்
    காலம் அறிந்து செயின்
                        (குறள், 631, 483)                    7