1323. | அறுபதினாயிரர் எனினும், ஆண்தகைக்கு உறுதியில் ஒன்று இவர்க்கு உணர்வு என்று உன்னலாம் பெறல் அருஞ் சூழ்ச்சியர் ; திருவின் பெட்பினர் ;- மறி திரைக் கடல் என வந்து சுற்றினார். |
திருவின்பெட்பினர் - செல்வப் பெருக்கம் வாய்ந்தவர்கள் ; அறுபதினாயிரர் எனினும் - அறுபதினாயிரம்பேர் என்றாலும் ; ஆண்தகைக்குஉறுதியின் - ஆண்மையிற் சிறந்தவனாகியதசரதனுக்கு நன்மையைக் கருதுவதில் ; இவர்க்கு உணர்வு ஒன்று என்று- இவர்கள் எல்லோர்க்கும் அறிவு ஒன்றே என்று ; உன்னல்ஆம் -நினைக்கத்தக்க; பெறல் அருஞ் சூழ்ச்சியர் - பெறுவதற்கு அரியஆராய்ச்சி நிறைந்த அமைச்சர்கள்; மறுதிரைக் கடல் என - மடங்கிவிழும் அலைகளையுடைய கடல்போல ; வந்து சுற்றினார் - அரசவைக்குவந்து நிறைந்தார்கள். கம்பர், அமைச்சர் மிகப் பலர் என்பதனைச் சுட்ட அறுபதினாயிரம் என்னும் எண்ணைக் குறிக்கிறார். இவ்வாறே தசரதன் ஆட்சிபுரிந்த காலம் அறுபதினாயிரம் ஆண்டு(182), அவன் மனைவியர் அறுபதினாயிரவர் (1779), சனகன் அவைக்கு வில்லைத் தூக்கிவந்த வீரர்அறுபதினாயிரவர் (668) என்றும் குறிப்பர். பெருவேந்தர்களுக்கு எல்லாம் அறுபதினாயிரம் என்று குறித்தல் சிலரது போக்கு. சூழ்ச்சி - பலகால் எண்ணுதல் ; ஆராய்ச்சி. 10 |