தயரதன் தன் உளக் கருத்தை வெளியிடுதல்  

1325.அன்னவர், அருள் அமைந்து இருந்த ஆண்டையில்,
மன்னனும், அவர் முகம் மரபின் நோக்கினான் ; 
‘உன்னிய அரும் பெறல் உறுதி ஒன்று உளது ; 
என் உணர்வு அனைய நீர் இனிது கேட்டிரால் !

     அன்னவர்- அந்த அமைச்சர்கள் எல்லோரும் ; அருள் அமைந்து
இருந்த ஆண்டையில்
- மன்னன் அருளைப் பெற்று இருக்கையில்
அமர்ந்திருந்த அக்காலத்தில் ;  மன்னனும் அவர் முகம்- தயரதனும்
அவர்களது முகத்தை ;  மரபினன் நோக்கினான் -முறையாகப்
பார்த்தான் ;“உன்னிய - என்னால் நினைக்கப்பட்ட ; பெறல்அரும்
உறுதி ஒன்று உளது
- பெறுதற்கு அரிய உறுதிப் பொருள் ஒன்று
உள்ளது ; என் உணர்வு அனைய நீர் - (அதனை)என் உணர்வை ஒத்த
நீவிர் ;  இனிது கேட்டிரால் - நன்றாகக்கேட்பீர்களாக” என்றான்.

     உறுதி - ஈண்டுஉறுதியைப் பயக்கும் பொருளைக் குறித்தது.
அஃதாவது இராமனுக்கு முடிசூட்டித் தான் வீடுபேறு அடைதற்குரிய நெறியில்
செல்லத் தயரதன் நினைத்ததைக் குறித்தது. யான் உணர்தற்குரியதை நீங்கள்
உணர்ந்து கூறும் தன்மையுடையீர் என்னும் கருத்தினால் ‘என் உணர்வு
அனைய நீர்’ என்றான்.                                         12