1328. | ‘விரும்பிய மூப்பு எனும் வீடு கண்ட யான், இரும் பியல் அனந்தனும், இசைந்த யானையும், பெரும் பெயர்க் கிரிகளும் பெயர, தாங்கிய அரும் பொறை இனிச் சிறிது ஆற்ற ஆற்றலேன். |
‘விரும்பிய மூப்பு எனும் வீடு - நெடுங்காலமாக விரும்பியிருந்த மூப்புப் பருவமாகிய (அரச பதவியிலிருந்து) விடுதலை பெறுதற்குரிய காலத்தை ; கண்ட யான் - அடைந்த யான்; இரும் பியல் அனந்தனும் - பெரிய பிடரினையுடைய ஆதிசேடனாகியபாம்பும் ; இசைந்த யானையும்- திக்குகளில் பொருந்திய யானைகளும் ; பெரும் பெயர்க் கிரிகளும் - மிக்க புகழ் வாய்ந்த எட்டுக் குல மலைகளும் ; பெயர - (பூமியைச் சுமக்கும் தொழிலிருந்து) நீங்க ; தாங்கிய அரும் பொறை - யான் சுமந்த அரிய பாரத்தை ; இனிச் சிறிது ஆற்ற ஆற்றலேன் - இனிமேல் சிறிதளவும் சுமக்க வல்லேனல்லேன்.’ இரான் பிறந்தபின் தான் அரசாட்சியை விட்டுத் தவஞ் செய்யச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தோடு இருந்தவனாதலின் ‘விரும்பிய மூப்பு எனும் வீடு’ என்றான். பியல்- பிடரி. திசை யானைகள் - ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்ப தந்தம்,சார்வ பௌமம், சுப்பிரதீபம் என்பன. னுட்டுக் குலமலைகள் - இமயம், மந்தரம், கைலாசம்,விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம் என்பன. |