1329.‘நம் குலக் குரவர்கள், நவையின் நீங்கினார்,
தம் குலப் புதல்வரே தரணி தாங்கப் போய்,
வெங் குலப் புலன் கெட, வீடு நண்ணினார் ; 
எங்கு உலப்புறுவர், என்று எண்ணி, நோக்குகேன்.

     ‘நவையின் நீங்கினார் - குற்றங்களினின்று நீங்கியவர்களாகிய ; நம்
குலக் குரவர்கள்
- எம் குலத்தில் தோன்றிய பெரியோர்கள் ;  தம்குலப்
புதல்வரே
- தம் மேலான பிள்ளைகளே ;  தரணி தாங்க - நிலவுலகைப்
போற்றிக் காக்க ;  போய் - தாம் காட்டிற்குச் சென்று ; வெம்குலப்புலன்
கெட
- கொடிய கூட்டமாகிய ஐம்புல ஆசைகள் அற்று ஒழிய ;  வீடு
நண்ணினார் -வீடுபேறு அடைந்தவர்கள் ; எங்கு உலப்பு உறுவர் என்று-
எங்கு எண்ணிக்கையில்முடிவு பெறுவர் என்று ;  எண்ணி நோக்குகேன்-
எண்ணிப் பார்க்கின்றேன்.’

     எம் குலத்துப் பெரியோர்கள் குற்றத்தின் நீங்கி ஆட்சிபுரிந்து மூப்பு
அடைந்த பின்னர்த் தம் பிள்ளைகள் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கத் தாம்
தவஞ் செய்து வீடுபேறுபெற்றவர்களை எண்ணிப் பார்த்தால், அவர்கள்
எண்ணிறந்த பலராய் இருக்கின்றார்கள் என்பதுகருத்து. நவை - காமம்,
வெகுளி, மயக்கம் என்னும் குற்றங்கள். ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு,ஓசை,
நாற்றம் என்பன. உலப்பு - முடிவு.                                16