1330. | ‘வெள்ள நீர் உலகினில், விண்ணில், நாகரில், தள்ள அரும் பகை எலாம் தவிர்த்து நின்ற யான், கள்ளரின் கரந்து உறை காமம் ஆதி ஆம் உள் உறை பகைஞருக்கு ஒதுங்கி வாழ்வெனோ? |
‘வெள்ள நீர் உலகில் - கடலால் சூழப்பட்ட இந்த உலகத்திலும் ; விண்ணில் - வானுலகத்திலும்; நாகரில் - நாகர்கள் வாழும் கீழுலகத்திலும்; தள்ள அரு பகைஎலாம் - நீக்குதற்கு அரிய (புறப்) பகைவர்களை எல்லாம் ; தவிர்த்து நின்ற யான் - ஒழித்து வென்றுநின்ற யான் ; கள்ளரின் -திருடர்களைப் போன்று ; கரந்துஉறை காமம் ஆதி ஆம்- ஒளிந்து வாழும் காமம்முதலான ; உள் உறு பகைஞருக்கு - உள்ளே பொருந்திய பகைவர்களுக்கு ; ஒதுங்கிவாழ்வெனோ - அஞ்சி அடங்கி வாழ்வேனோ? (வாழேன்) புறப் பகையை வென்ற யான் அகப் பகையினுக்கு அஞ்சி அடங்கமாட்டேன்என்பது கருத்து. காமம் ஆதிப் பகைவர்கள் : காமம், குரோதம், லோபம் (கடும்பற்றுள்ளம்) மோகம், மதம், மாற்சரியம் என்பன ; இவற்றை வடநூலார் அரிஷட்வர்க்கம்என்பர். இவ்வாறனையும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்றனுள் அடக்கிக் கூறுவது தமிழ்மரபு. தயரதன் மூவுலகும் வென்றவன் என்பது, “மாகமும் நாகமும் மண்ணும் வென்றவாளான்” (1515) என்று பின்னரும் சுட்டப்படுவது காணலாம். ஓகாரம் எதிர்மறை. 17 |