1331. ‘பஞ்சி மென்தளிர் அடிப்
     பாவை கோல் கொள,
வெஞ் சினத்து அவுணர்
     தேர் பத்தும் வென்றுளேற்கு,
எஞ்சல் இல் மனம்
     எனும் இழுதை ஏறிய
அஞ்சு தேர் வெல்லும்
     ஈது அருமை ஆவதோ?

    ‘பஞ்சி மென் தளிர் அடிப் பாவை - செம்பஞ்சுக் குழம்பு பூசப்பட்ட
மென்மையான தளிர்போலும் பாதங்களையுடைய கைகேயி ;  கோல்கொள-
சாட்டைகொண்டு தோரோட்ட ; வெம் சினத்து அவுணர்தேர் பத்தும்
- கொடிய கோபத்தையுடைய அசுரர்களின் பத்துத் தேர்களையும் ; 
வென்று உளேற்கு
- வென்றுள்ளவனாகிய எனக்கு ; எஞ்சல்இல்
மனம் எனும்
- குறைவு அற்ற மனம் என்னும் ;  இழுதைஏறிய
- பேய் ஏறிச்செலுத்துகிற ;  அஞ்சு தேர் - பொறியாகியஐந்து
தேர்களை ;  வெல்லும்ஈது - வெல்லும் தொழிலாகியஇது ; அருமை
ஆவதோ
- அருமைப்பாடு உடையதுஆகுமோ? (ஆகாது)’

     பஞ்சிமென் தளிர்அடி - பஞ்சினையும் தளிரினையும் நிகர்த்த அடிகள்
எனலும் ஆம். கோல் கொள்ளுதலாகிய காரணம் தேரை ஓட்டுதலாகிய
காரியத்தை உணர்த்தியதால்உபசார வழக்கு. இழுதை - பேய் ;  “இழுதை
நெஞ்சினோன்” (2201). பத்துத் தேர்களைவென்றவனுக்கு ஐந்து தேர்களை
வெல்லுவது அரிதாவதோ என்றது நயம்.                            18