1332. ‘ஒட்டிய பகைஞர் வந்து உருத்த போரிடைப்
பட்டவர் அல்லரேல், பரம ஞானம் போய்த்
தெட்டவர் அல்லரேல், “செல்வம் ஈண்டு” என
விட்டவர் அல்லரேல், யாவர் வீடு உளார்?

     ‘ஒட்டிய பகைஞர் வந்து - வஞ்சினம் கூறிய பகைவர்கள் எதிர்த்து
வந்து ;  உருத்த போரிடை - சினந்து செய்யும் போர்க்களத்தில் ;
பட்டவர் அல்லரேல்
- இறந்தவர் அல்லராயின் ;  பரம ஞானம்
போய்த்தெட்டவர்அல்லரேல்
- மேலான ஞானம் கைவரப் பெற்றுத்
தெளிந்தோர் அல்லராயின் ;  ‘செல்வம் ஈண்டு’ என - ‘பொருள்
பயன்படுவது இவ்வுலகில் மட்டுமே’ என்று உணர்ந்து ; விட்டவர்
அல்லரேல்
- அதனை முற்றுத் துறந்தவர் அல்லராயின் ;  யாவர் விடு
உளார்
- யாவர் வீட்டுலகத்தை அடைபவர் ஆவார்? (ஒருவரும் ஆகார்).’

     போர்க்களத்தில் வீழ்ந்த மறவரும், ஞானம் மிக்கு மெய்யுணர்வு கூடப்
பெற்றவரும், செல்வ நிலையாமை உணர்ந்து துவரத் துறந்தவரும் வீடு
பெறுவார் என்பது கருத்து.உருத்தல் - சினத்தல். பரமஞானம் - எல்லாம்
இறைவனாகக் காணும் மேலான ஞானம். தெட்டவர் -தெளிந்தவர்.
தயரதனுக்குப் பகையின்மையால் போரிடை வீழ்தலும், பரம ஞானம்
கூடாமையால்தெளிவும் வாய்த்தில. ஆதலால் செல்வ நிலையாமை
உணர்ந்து துறவுநெறி சேர்தலே வீடு பெறற்குவழியாய் அமைந்தது என்பது
போதரும்.                                                    19