1333. | ‘இறப்பு எனும் மெய்ம்மையை, இம்மை யாவர்க்கும், மறப்பு எனும் அதனின்மேல் கேடு மற்று உண்டோ? துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின், பிறப்பு எனும் பெருங் கடல் பிழைக்கல் ஆகுமோ? |
இம்மை யாவர்க்கும் - இப்பிறப்பிலே எவர்க்கும் ; இறப்பு எனும் மெய்ம்மையை - சாவு உண்டு என்னும் உண்மையை ; மறப்பு எனும் அதனின்மேல் - மறத்தல் என்னும் அதற்கு மேற்பட ; கேடு மற்று உண்டோ - கெடுதல் வேறு உண்டோ? (இல்லை) ; துறப்பு எனும் தெப்பமே - துறத்தல் என்னும்மிதவையே ; துணை செய்யாவிடின் - உதவி செய்யாவிட்டால் ; பிறப்புஎனும் பெருங்கடல் - பிறப்பு என்னும் பெரிய கடலினின்று ; பிழைக்கல் ஆகுமோ- தப்புதல் இயலுமேடா? இயலாது. யாக்கை நிலையாமையை எஞ்ஞான்றும் மனத்துக் கொண்டால் அது பிறவியைஒழித்தற்கு இன்றியமையாத துறவினை மேற்கொள்ளச் செய்யும் ; செய்யவே, பிறவிப் பெருங்கடல்கடத்தலாகும் என்பது கருத்து. காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின் பிறவிப் பெருங்கடல் என்றார். “பிறவிப் பெருங்கடல்” (குறள், 10) என்பர் திருவள்ளுவரும். பிழைக்கல்- தப்புதல், உய்தல். 20 |