1335. | ‘இனியது போலும் இவ் அரசை எண்ணுமோ- துனி வரு புலன் எனத் தொடர்ந்து தோற்கலா நனி வரும் பெரும் பகை நவையின் நீங்கி, அத் தனி அரசாட்சியில் தாழும் உள்ளமே? |
‘துனி வரு - துன்பம் வருதற்குக் காரணமாகிய ; புலன் எனத் தொடர்ந்து - ஐம்புலன்கள் என்னும் பெயரையுடையனவாக உயிரைப் பற்றிக்கொண்டு ; தோற்கலா - தோல்வியுறாத ; நனிவரும் பெரும் பகை நவையின் நீங்கி -மிகுதியாக வருகின்ற பெரிய பகையினால் வரும் குற்றங்களினின்றும் விலகி ; அத் தனிஅரசாட்சியில் - அந்த ஒப்பற்ற வீட்டரசை ஆளுவதில் ; தாழும் உள்ளம் -ஈடுபடும் மனமானது ; இனியது போலும் இவ் அரசை - இனியது போலத் தோற்றும் இந்த உலகினை ஆளும் அரசாட்சியை ; எண்ணுமோ - ஒரு பொருளாக மதிக்குமோ?(மதிக்காது)’ புலன் எனத் தொடர்ந்து என்பது “நாள்என ஒன்றுபோல் காட்டி” என்பது போலவருவது. புறப்பகையினும் அகப்பகை கொடிதாதலின் பெரும்பகை எனப்பட்டது. அரச பதவி துன்பமின்றித்தொழத்தக்கது அன்றாதலின் ‘இனியது போலும் அரசு’ என்றார். கீழ் உள்ள பாடல்களில் துறவின்பெருமை பேசி, இதில் அத்துறவில் தன்மனம் செல்வதைத் தெரிவிக்கிறான் தயரதன். 22 |