1336. | ‘உம்மை யான் உடைமையின், உலகம் யாவையும் செம்மையின் ஓம்பி, நல் அறமும் செய்தனென் ; இம்மையின் உதவி, நல் இசை நடாய நீர், அம்மையும் உதவுதற்கு அமையவேண்டுமால். |
‘யான் உம்மை உடைமையின் - நான் உங்களை மந்திரக் கிழவர்களாகப்பெற்றதால் ; உலகம் யாவையும் - உலகம் முழுவதையும்; செம்மையின்ஓம்பி - முறையாகப் பேணிக் காத்து ; நல் அறமும் செய்தனென் - சிறந்தஅறச் செயல்களையும் செய்தேன் ; இம்மையின் உதவி - இவ்வாறு இவ்வாழ்வில்எனக்கு உதவி செய்து; நல் இசை நடாய நீர் - எனது நல்ல புகழை பரவச் செய்தநீங்கள்; அம்மையும் உதவுதற்கு- அவ்வுலகப் பேற்றுக்கும் உதவி செய்தவற்கு ; அமைய வேண்டும் - மனங்கொள்ள வேண்டும்.’ ஆல் - அசை. நல்லறமாவது தானம், வேள்வி முதலிய புரிதலாகும். “ஈந்தேகடந்தான் இரப்போர் கடல்” (172) என அரசியற் படலத்துள் தயரதன் செய்த அறச்செயல்பேசப்பட்டுள்ளமை காணலாம். அம்மை - மறுமை. 23 |