1337. ‘இழைத்த தொல் வினையையும் கடக்க எண்ணுதல்,
தழைத்த பேர் அருளுடைத் தவத்தின் ஆகுமேல்,
குழைத்தது ஓர் அமுதுடைக் கோரம் நீக்கி, வேறு
அழைத்த தீ விடத்தினை அருந்தல் ஆகுமோ?

     ‘இழைத்த தொல் வினையையும் - ஒருவன் செய்த பழமையான
வினைகளின்பயன்களையும் ;  கடக்க எண்ணுதல் - தாண்டிச்செல்லக்
கருதுவது ;  தழைத்தபேர் அருள் உடைத் தவத்தின் ஆகுமேல் -
மிகுந்த பெரிய அருளையுடைய தவத்தினால்உண்டாகுமானால், (அத்தவத்
தினைச் செய்யாது) ;  குழைத்தது ஓர் அமுதுடைக் கோரம் நீக்கி-
இனியவற்றைக் கூட்டிச் சேர்த்த அமுதத்தைக் கொண்ட வட்டிலை ஒதுக்கி ;
வேறுஅழைத்த தீ விடத்தினை - அதற்கு மாறாகச் சொல்லப் பட்ட
கொடிய நஞ்சினை ;  அருந்தல் ஆகுமோ - நுகர்தல் தகுமோ? (தகாது)’

     அமுத வட்டிலை ஒதுக்கிவிட்டுத் தீவிடத்தினை நுகர்தல் தகாதது
போலத்தவத்தினை விடுத்து அரச வாழ்வில் மூழ்கியிருத்தல் தகாது என்பது
கருத்து. ‘தவத்தினைச்செய்யாமல் அரசவாழ்வை மேற்கொண்டிருத்தல்’
என்னும் பொருளினைச் சொல்லாமல் உவமையை மட்டும்கூறியதனால் இது
ஒட்டணி ஆகும். கோரம் - வட்டில்.                              24