1340. “இறந்திலன் செருக் களத்து
     இராமன் தாதை ; தான்,
அறம்தலை நிரம்ப, மூப்பு
     அடைந்த பின்னரும்,
துறந்திலன்” என்பது ஓர் சொல்
     உண்டானபின்,
பிறந்திலென் என்பதின்
     பிறிது உண்டாகுமோ?

     இராமன் தாதை - இராமனுக்குத் தந்தையான தயரதன் ;
செருக்களத்து இறந்திலன் - போர்க்களத்தில் உயிர் விட்டானில்லை ;
தான்மூப்பு அடைந்த பின்னரும் - தான் கிழத்தனத்தை அடைந்த
பிறகும் ;  அறம் தலைநிரம்ப - அறம் முழுதும் நிறையும்படி ; 
துறந்திலன் - துறவு நெறியைமேற்கொண்டானில்லை ;  என்பது ஓர்
சொல்
- என்பதாகிய ஒரு பழிச்சொல் ; உண்டான பின் - தோன்றிய
பின்பு ;  பிறந்திலென் என்பதின் -பிறந்திலேன் என்பதினும் ;  பிறிது
உண்டாகுமோ
- வேறு உண்டோ?

     முனைமுகத்து விழுப்புண் பட்டு வீரசுவர்க்கம் அடைவது மன்னர்க்குச்
சிறப்பு ;  அது வாய்க்காது போயின், மூப்புப் பருவத்தில் துறந்து அதன்
பயன் கோடல்தக்கதாம். இவ்விரண்டும் வாய்க்காது போயின் பிறந்தும்
பயனில்லை ;  பழிச்சொல்உண்டாகும் என்பது வற்புறுத்தப்பட்டது. பிறவிப்
பயன் அடையாதார் பிறந்தும் பிறவாதாரே ஆவார்.‘இராமன் தாதை’
என்பது பிள்ளையைப் பெற்ற பின்னரும் துறந்திலன் என்னும் குறிப்பினை
உட்கொண்டது.                                               27