1343. ‘ஆதலால், இராமனுக்கு அரசை நல்கி, இப்
பேதைமைத்தாய் வரும் பிறப்பை நீக்குறு
மா தவம் தொடங்குவான் வனத்தை நண்ணுவேன் ; 
யாது நும் கருத்து?’ என, இனைய கூறினான்.

     ஆதலால் - ஆகையால் ; இராமனுக்கு அரசை நல்கி -
இராமனுக்கு அரசாட்சியை அளித்துவிட்டு ;  இப் பேதைமைத்தாய் வரும்
பிறப்பை
-இந்த அறியாமையை உடையதாக வரும் பிறவி நோயை ;
நீக்குறு மாதவம் தொடங்குவான்- நீக்குகின்ற பெரிய தவத்தைத்
தொடங்குவதற்காக ;  வனத்தை நண்ணுவேன் -கானகத்தை அடையப்
போகிறேன் ;  நும் கருத்து யாது - உங்கள் எண்ணம் யாது ; என -
என்று ;  இனைய கூறினான் - இத் தன்மையானவற்றைத் தெரிவித்தான்.

     பேதைமை - அறியாமை ;  அவிச்சை, அறியாமை நிறைந்தது மனிதப்
பிறப்பு என்பதனைத் திருவள்ளுவரும் “பிறப்பென்னும் பேதைமை” (358)
என்று புலப்படுத்தியுள்ளார்.தொடங்குவான் - ‘வான்’ ஈற்று எதிர்கால
வினையெச்சம். இனைய - குறிப்பு வினையாலணையும்பெயர். இராமனுக்கு
இளவரசுப் பட்டம் கட்டத் தயரதன் எண்ணியதாகவே முதல்நூல் கூறுகிறது.
இங்கோஅரசுரிமை ஏற்றலே பேசப்படுகிறது.                       30