மந்திரக் கிழவரின் மன நிலை  

கலிநிலைத்துறை

1344.திரண்ட தோளினன்
     இப்படிச் செப்பலும், சிந்தை
புரண்டு மீதிடப்
     பொங்கிய உவகையர், ஆங்கே
வெருண்டு, மன்னவன்
     பிரிவு எனும் விம்முறு நிலையால்,
இரண்டு கன்றினுக்கு
     இரங்கும் ஓர் ஆ என இருந்தார்.

    திரண்ட தோளினன் - பருத்த தோள்களை உடைய தயரத மன்னன்;
இப்படிச் செப்பலும் - இவ்வாறு கூறவும் ;  சிந்தைபுரண்டு மீதிடப்
பொங்கிய உவகையர்
- (மந்திரக் கிழவர்) மனத்தினின்று பொங்கி மேலிட
வழிந்த மகிழ்ச்சியைஉடையவர்களாய் ;  ஆங்கே -அதே நேரத்தில் ;
மன்னவன் பிரிவு எனும்- தயரதன் பிரிவு என்கிற ; விம்முறுநிலையால்
வெருண்டு
- இரங்குதற்குரியநிலைமையால்
மனம்கலங்கி ;  இரண்டு
கன்றினுக்கு
- இரு கன்றுக்குட்டிகளுக்காக ; இரங்கம்ஓர் ஆ என -
மனம் இரங்கும் ஒரு பசுவைப்போல ; இருந்தார் -(ஒன்றும்
தெளிய மாட்டாதவராக) இருந்தனர்.

     இரு கன்றுகளை உடைய பசு இரண்டில் ஒன்றை விடும் நிலை
வந்தபோது எதையும்பிரிய மனம் ஒருப்படாமல் இரண்டுக்கும்
இரங்குவதுபோல, தயரதன் துறத்தலையும், இராமன்அரசனாகாமல்
இருத்தலையும் விரும்பாமல் இருவரையும் விட மனமின்றி இரங்கினர்
என்பது உவமையாற்போந்த பொருளாகும். விம்முறல் - துன்பமுறுதல் ;
இரங்குதல்.                                               31