1347. | ‘நிருப ! நின் குல மன்னவர் நேமி பண்டு உருட்டிப் பெருமை எய்தினர் ; யாவரே இராமனைப்பெற்றார்? கருமமும் இது ; கற்று உணர்ந்தோய்க்கு இனிக் கடவ தருமமும் இது ; தக்கதே உரைத்தனை ; - தகவோய் ! |
‘நிருப - மன்னவனே! தகவோய் - தகுதியுடையோனே! பண்டு - முற்காலத்தில் ; நின் குல மன்னர் நேமி உருட்டி - உன்குலத்தில் தோன்றிய அரசர்கள் ஆணைச் சக்கரத்தைச் செலுத்தி ; பெருமை பெற்றனர்- பெருமை அடைந்தார்கள் ; யாவரே இராமனைப் பெற்றார்- அவர்களுள்இராமனைப் போன்ற மைந்தனைப் பெற்றவர் எவர்? (ஒருவரும் இலர்) ; கற்று உணர்ந்தோய்க்கு- கற்பதற்குரிய நூல்களைக் கற்று அவற்றின் பொருளை உணர்ந்த உனக்கு ; கருமமும்இது - இப்பொழுது செய்தற்குரியதும் இதுவே ; இனி கடவ தருமமும் இது - இனிச் செய்வதற்குரிய அறச்செயலும் இதுவே ; தக்கதே நினைந்தனை - தகுதியுடைய செயலையேபுரியக் கருதினாய்.’ மன்னன் ஆணையைச் சக்கரம் என்றல் மரபு. ‘யாவரே இராமனைப் பெற்றார்’என்பது இராமன் தனிச் சிறப்புகள் பல பெற்றவன் என்பதனைக் குறித்தது. கருமம் தன் நலம்குறித்துச் செய்வது ; தருமம் - யாவர்க்கும் பயன் தரும்படி செய்வது. 34 |