1350. | ‘பொன் உயிர்த்த பூ மடந்தையும், புவி எனும் திருவும், “இன் உயிர்த் துணை இவன்” என, நினைக்கின்ற இராமன், “தன் உயிர்க்கு” என்கை புல்லிது ; தற் பயந்து எடுத்த உன் உயிர்க்கு என நல்லன், மன் உயிர்க்கு எலாம் ; - உரவோய் ! |
‘உரவோய் ! - வலிமை உடையோய் ; பொன் உயிர்த்த பூ மடந்தையும் - அழகினைத் தோற்றுவிக்கும் சீதேவியும் ; புவி எனும் திருவும் - மண்மடந்தையும் ; இன் உயிர்த் துணை இவன் என நினைக்கின்ற இராமன் - (தமக்கு)இனிய உயிர் போன்ற துணைவன் இவனே என்று கருதுகின்ற இராமன் ; தன் உயிர்க்கு(நல்லன்) என்கை புல்லிது - தன் உயிர்க்கு இனியான் என்று சொல்லுவது புன்மையானது ; தன் பயந்து எடுத்த - தன்னைப் பெற்றெடுத்த ; உன் உயிர்க்கு என - உன்உயிர்க்கு எவ்வாறு நல்லனாக இருக்கிறானோ அவ்வாறே ; மன் உயிர்க்கு எலாம் -நிலைபெற்ற எல்லா உயிர்களுக்கும் ; நல்லன் - நல்லவனாய் இருக்கிறான்.’ இப்பாட்டு, இராமன் தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் என்பதனைக்கூறுகிறது. உயிர்த்துணைவன் உவமத்தொகை. 37 |