1352. | ‘மண்ணினும் நல்லள் ; மலர்மகள், கலைமகள், கலை ஊர் பெண்ணினும் நல்லள் ; பெரும் புகழ்ச் சனகியோ நல்லள்- கண்ணினும் நல்லன் ; கற்றவர் கற்றிலா தவரும், உண்ணும் நீரினும், உயிரினும், அவனையே உவப்பார். |
‘பெரும் புகழ்ச் சனகியோ - பெரும் கீர்த்தியையுடைய சானகியோ என்றால் ; மண்ணிலும் நல்லள் - பொறுமையில் நிலமகளினும் சிறந்தவள்; மலர்மகள் கலைமகள் கலைஊர் பெண்ணினும் நல்லள் - அழகில் திருமகளையும், அறிவில்கலைமகளையும், ஆற்றலில் கலைமானை வாகனமாகக் கொண்ட துர்க்கையையும்விடச் சிறந்தவள் ; கண்ணினும் நல்லன் - அவளுக்குக் கணவனான இராமனோ கண்ணைவிடச் சிறந்தவன்; அவனையே - அவன் ஒருவனையே ; கற்றவர் கற்றிலாதவரும் - படித்தவர்களும்சிறிதும் படிக்காதவரும் ; உண்ணும் நீரினும் - உயிர் இருப்பதற்குக் காரணமானபருகும் நீரைவிடவும் ; உயிரினும் - உடம்பு இயங்குதற்குக் காரணமானஉயிரைவிடவும் ; உவப்பார் - விரும்புவர்.’ 39 |