1363.கண்டு, கைதொழுது, ‘ஐய, இக்
     கடலிடைக் கிழவோன்,
“உண்டு ஒர் காரியம் ; வருக !” என,
     உரைத்தனன்’ எனலும்,
புண்டரீகக் கண் புரவலன்
     பொருக்கென எழுந்து, ஓர்
கொண்டல்போல் அவன், கொடி நெடுந்
     தேர்மிசைக் கொண்டான்.

     கண்டு கைதொழுது - சுமந்திரன் இராமனைப் பார்த்துக் கை கூப்பி
வணங்கி ;  ஐய - ஐயனே !  இக் கடல்இடைக் கிழவோன் - இந்தக்
கடலால் சூழப்பட்ட உலகுக்கு உரியவனான தயரத மன்னன்; ‘ஒர் காரியம்
உண்டு
-ஒரு காரியம் உள்ளது ;  வருக என - (ஆதலால்) இராமனை
அழைத்து வருக என்று ; உரைத்தனன்’ எனலும் - சொன்னான் என்ற
அளவில் ;  புண்டரீகக் கண் புரவலன் - செந்தாமரைக் கண்ணனாகிய
இராமன் ;  பொருக்கென எழுந்து - விரைவாகப்புறப்பட்டு ;  ஓர்
கொண்டல்போல்
- ஒரு கரிய மேகம் போல ;  அவன்கொடி நெடுந்
தேர்மிசைக் கொண்டான்
- அந்தச் சுமந்திரனது கொடி பறக்கும் நெடிய
தேரில்ஏறிக்கொண்டான்.

     கடலிடை - கடலால் சூழப்பட்ட இடம் ;  உலகு. கிழவோன் -
உரிமையுடையவன்.                                            50