1369. | வள் உறை கழித்து ஒளிர்வன வாள் நிமிர் மதியம் தள்ளுறச் சுமந்து, எழுதரும் தமனியக் கொம்பில், - புள்ளி நுண் பனி பொடிப்பன, பொன்னிடைப் பொதிந்த, எள்ளுடைப் பொரி விரவின, - உள சில இளநீர். |
வள் உறை கழித்து - (இராமனைக் கண்டவுடன்) வாரினால் இயன்ற உறைகளை நீக்கி ; ஒளிர்வன வாள் - ஒளிவீசுகின்ற வாள்களோடு ; நிமிர் மதியம் தள்ளுறச் சுமந்து - நிமிர்ந்த சந்திரனைத் தள்ளாடியவாறு சுமந்து கொண்டு ; எழுதரும் தமனியக் கொம்பில் - எழுகின்ற பொன்னாலாகிய கொம்புகளில் ; உளசிலஇளநீர் - உள்ளனவாகிய இரண்டு இளநீர்கள் ; புள்ளி நுண்பனி பொடிப்பன -புள்ளிகளாகிய நுண்ணிய வியர்வை தோன்றுவனவும் ; பொன்னிடைப் பொதிந்த -இடையிடையே பொற் பொடி கலந்தனவுமாய் ; எள்ளுடைப் பொரி விரவின - தேமலாகிய எள்ளின் பொரிகள் ஆங்காங்கு விரியப் பெற்றன. மகளிரின் இமைகளை உறைகளாகவும், கண்களை வாளாகவும், முகத்தை மதியாகவும், அவர்களைக் கொம்பாகவும், வியர்வையைப் புள்ளிகளாகவும், தேமலைப் பொன்னாகவும்,பசலையை எட்பொரியாகவும், நகில்களை இளநீராகவும் உருவகித்தார். சில - ஈண்டு இரண்டு என்னும்பொருளில் வந்தது. 56 |