தயரதன் இராமனைத் தழுவுதல் 1371. | மாதவன்தனை வரன்முறை வணங்கி, வாள் உழவன் பாத பங்கயம் பணிந்தனன் ; பணிதலும், அனையான், காதல் பொங்கிட, கண் பனி உகுத்திட, கனி வாய்ச் சீதை கொண்கனைத் திரு உறை மார்பகம் சேர்த்தான். |
வரன்முறை மாதவன்தனை வணங்கி - தொன்றுதொட்டுவரும் முறைப்படி பெரியதவமுனியாகிய வசிட்டனைத் தொழுது ; வான் உழவன் பாத பங்கயம் பணிந்தனன் -வாட்போரில் வல்லவனான தயரத மன்னன் திருவடியாகிய தாமரைகளை வணங்கினான் ; பணிதலும் - அவ்வாறு இராமன் வணங்கிய அளவில் ; அனையான் - அவ்வாறுவணங்கப்பெற்ற தயரதன் ; காதல் பொங்கிட - இராமன் மீது கொண்ட பாசம்மேலிட ; கண்பனி உகுத்திட - கண்கள் இன்பக் கண்ணீரைச் சொரிந்திட ; கனிவாய்ச் சீதை கொண்கனை - கனிபோன்ற இதழ்களையுடைய சீதையின் கணவனாகியஇராமனை ; திருஉறை மார்பகம் சேர்த்தான் - திருத் தங்கிய தன் மார்போடுஅணைத்துக் கொண்டான். வாள் உழவர் - வாட்போரில் வல்லவர். வில்லேர் உழவர் என்று திருவள்ளுவர் வீரர்களைக் குறித்தல் கருதத்தக்கது (குறள். 872) திரு - அரசச் செல்வம். 58 |