1375. | ‘ “உரிமை மைந்தரைப் பெறுகின்றது, உறு துயர் நீங்கி, இருமையும் பெறற்கு” என்பது பெரியவர் இயற்கை ; தருமம் அன்ன நின்-தந்த யான், தளர்வது தகவோ? கருமம் என்வயின் செய்யின், என் கட்டுரை கோடி. |
‘உரிமைமைந்தரைப் பெறுகின்றது - எல்லா உரிமைகளையும் உடையபிள்ளையை ஒருவர் பெறுவது ; உறு துயர் நீங்கி -மிக்க துயரத்தினின்றும்விலகி ; இருமையும் பெறற்கு என்பது -இம்மை மறுமை இன்பங்களை அடைவதற்காகும்என்பது ; பெரியவர் இயற்கை- பெரியோரது இயல்பாக உள்ளது ; தருமம்அன்ன நின் தந்த யான்- அறமே போன்ற நின்னை மகனாகப் பெற்ற நான் ; தளர்வது தகவோ- மனத் தளர்ச்சியடைதல் தக்கதோ? (அன்று) ; என்வயின் கருமம் செய்யின் - (ஆதலால்) என்மீது செய்தற்குரியது செய்ய விரும்பினால் ; என் கட்டுரை கோடி - என் பயனுள்ளசொல்லைக் கொள்வாய்.’ உரிமை மைந்தர் - அறநூல்கள் புத்திரர்களின் வகைகள் சில கூறுகின்றன.அவர்களுள் சிலர்க்குச் சில உரிமையே உண்டு. ஒருவனுக்கு முறைப்படி பிறந்த மகனுக்கே எல்லாஉரிமைகளும் உண்டு. அத்தகைய மைந்தர் என்றவாறு. மைந்தனைப் பெறுவதன் பயன் துயரம் நீங்கிநன்மை அடைவதாகும். இதனைப் பின்னும், “பராவரும் புதல்வரைப் பயக்க யாவரும், உராவரும்துயரைவிட்டு உறுதி காண்பரால்” (1453) என்று குறிப்பர். 62 |