2500.‘சான்றவர் ஆக; தன் குரவர் ஆக; தாய்
போன்றவர் ஆக; மெய்ப் புதல்வர் ஆக; தான் -
தேன் தரு மலருளான் சிறுவ! -“ செய்வேன்” என்று
ஏன்றபின், அவ் உரை மறுக்கும் ஈட்டதோ?

     ‘தேன் தரு மலருளான் சிறுவ!- தேனைத் தருகின்ற தாமரை மலரில்
வீற்றிருக்கும்பிரமதேவனின் புதல்வ!; சான்றவர் ஆக - பெரியோர்களே
ஆகுக; தன் குரவர் ஆக- தன் ஆசிரியரே ஆகுக; தாய் போன்றவர்
ஆகுக
- தாய் முதலியவரே ஆகுக; மெய்ப்புதல்வர் ஆக - சத்தியத்திற்
பிறழாத தன் புதல்வர்களே ஆகுக; தான் - ஒருவன்; “செய்வேன்” என்று
ஏன்றபின்
- (இவர்களிடத்தில்) செய்வேன் என்று சம்மதித்தபின்; அவ்
உரை மறுக்கும் ஈட்டதோ?
- அந்த வார்த்தை முடியாது என்று
மறுக்கத்தக்கதன்மை யுடையதோ? (அன்று என்றபடி)

     தாய் போன்றவர் எனவே தந்தை, தம்முன், அரசன் முதலிய நான்கு
குரவர்களைக் குறிப்பிடாராயிற்று, ஒருவரிடம் ஒப்புக்கொண்டால் செய்தே
ஆகவேண்டும்; சத்தியம் பிறழ்தல் கூடாது என்றான்.                 126