1380. | ‘மன்னர் ஆனவர் அல்லர் ; மேல் வானவர்க்கு அரசு ஆம் பொன்னின் வார் கழல் புரந்தரன் போலியர் அல்லர் ; பின்னும், மா தவம் தொடங்கி, நோன்பு இழைத்தவர் அல்லர் ; சொல் மறா மகப் பெற்றவர் அருந்துயர் துறந்தார். |
‘அருந் துயர் துறந்தார் - இவ்வுலகில் அரிய துன்பத்திலிருந்து விடுபட்டவர்கள் ; மன்னர் ஆனவர் அல்லவர் - அரசர்களாக வாழ்கின்றவர்கள்அல்லர் ; மேல் - மேலுலகில் உள்ள ; வானவர்க்கு அரசு ஆம் -தேவர்களுக்கு அரசனாகிய ; பொன்னின் வார்கழல் புரந்தரன் போலியன் அல்லர் -பொன்னாலான நீண்ட வீரக்கழல் அணிந்த இந்திரன் போன்றவரும் அல்லர் ; பின்னும்- அன்றியும் ; மா தவம் தொடங்கி - பெருந்தவத்தைச் செய்யத் தொடங்கி ; நோன்பு இழத்தவர் அல்லர் - பல விரதங்களைச் செய்தவரும் அல்லர் ; சொல் மறா மகப் பெற்றவர் - (பின்னர் யார் என்று வினவின்) தம் சொல்லைத் தட்டாதமக்களைப் பெற்றவரே ஆவர்.’ நல்ல மக்களைப் பெற்றவரே துயரம் நீங்கியவர் என்பது கருத்து. “ஏவா மக்கள் மூவா மருந்து” என்பது ஈண்டு நினைத்தற்குரியது. 67 |