1381. | ‘அனையது ஆதலின், “அருந் துயர்ப் பெரும் பரம், அரசன் வினையின் என்வயின் வைத்தனன்" எனக் கொள வேண்டா; புனையும் மா முடி புனைந்து, இந்த நல் அறம் புரக்க நினையல் வேண்டும்; யான் நின்வயின் பெறுவது ஈது’ என்றான். |
‘அனையது ஆதலின்-அவ்வாறு இருத்தலின்; அரசன் அருந்துயர்ப் பெரும் பரம் -மன்னன் அரிய துன்பத்தைத் தரும் பெரிய அரச பாரத்தை; வினையின் என்வயின் வைத்தனன்- வஞ்சகமாக என்மீது சுமத்தினான்; எனக் கொள வேண்டா - என்று நினைத்துக்கொள்ள வேண்டா; புனையும் மாமுடி புனைந்து- அரசர் சூடும் பெருமை மிக்க கிரீடத்தை அணிந்து கொண்டு; இந்த நல் அறம் புரக்க - இந்த அரசாட்சியாகிய நல்ல அறத்தை வளர்க்க; நினையல்வேண்டும் - உளங்கொள வேண்டும்; யான் நின்வயின் பெறுவது ஈது’ என்றான் - நான்உன்னிடம் வேண்டுவது இதுவே என்றான். பகை களைந்து தக்கவாறு அறம் வழுவாமல் ஆட்சி செய்தலின் கடுமை பற்றி, ‘பெரும்பரம்’ என்றான்.‘நின்னை வேண்டி எய்திட விழைவது ஒன்று உண்டு’ (60) என்பது முதல் இச்செய்யுள்வரை தயரதன்பலர் முன்னிலையில் இராமனை அரசாட்சியை ஏற்க வேண்டிய செய்தி தெரிவிக்கப்பட்டது. 68 |