இராமன் தயரதன் கட்டளைக்கு இசைதல் 1382. | தாதை, அப் பரிசு உரைசெய, தாமரைக் கண்ணன் காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்; ‘கடன் இது’ என்று உணர்ந்தும், ‘யாது கொற்றவன் ஏவியது அது செயல் அன்றோ, நீதி எற்கு?’ என நினைந்தும், அப் பணி தலைநின்றான். |
தாதை அப் பரிச உரை செய -தந்தை அவ்வாறு சொல்ல; தாமரைக் கண்ணன் காதல் உற்றிலன் -தாமரை போன்ற கண்களை யுடைய இராமன் அரசாட்சி கிடைத்தது என்றுவிரும்பினான் அல்லன்; இகழ்ந்திலன் -அரசாட்சி துன்பமானது என்று வெறுத்தான் அல்லன்; இது கடன் என்று உணர்ந்தும் - அரசபதவியை ஏற்கும் இச்செயல் தனக்குரியகடமை என்று உணர்ந்தும்; கொற்றவன் யாது ஏவியது - அரசன் எதனைச் செய்யுமாறுஆணையிட்டானோ; அது செயல்அன்றோ - அதனைச் செய்வதல்லவா; எற்கு நீதி என நினைந்தும்-எனக்கு நியாயம் என்று எண்ணியும்; அப் பணி தலைநின்றான் - அரசபதவி ஏற்றலாகிய அச்செயலை மேற்கொண்டு நின்றான். இதனால் இராமன் ஆட்சியின்மீது விருப்போ வெறுப்போ இன்றி இருந்த தன்மையும் அவன் தந்தையின்சொற்களை மந்திரமாகக் கருதுபவன் என்னும் உண்மையும் சுட்டப்பட்டுள்ளன. 69 |