தயரதன்அரசர்களுக்கு ஓலை போக்குதல்

1385.வென்றி வேந்தரை, ‘வருக’ என்று,
     உவணம் வீற்றிருந்த
பொன் திணிந்த தோட்டு
     அரும் பெறல் இலச்சினை போக்கி,
‘நன்று சித்திர நளிர் முடி
     கவித்தற்கு, நல்லோய்!
சென்று, வேண்டுவ வரன்முறை
     அமைக்க’ எனச் செப்ப,

     வென்றி வேந்தரைவருக என்று - தயரதன்,  வெற்றிபொருந்திய
அரசர்களை அயோத்திக்கு  வருக என்று;  பொன் திணிந்ததோட்டு -
பொன்னாலாகிய ஓலையிலே; உவணம்  வீற்றிருந்த - கருடனது  வடிவம்
பெருமையோடு திகழ்ந்த; அரும் பெறல் இலச்சினை போக்கி-பெறுதற்கு
அரிய தன் அடையாள முத்திரையைவிட்டு அனுப்பி்;  ‘நல்லோய்- (பின்பு
வசிட்டமுனிவனை நோக்கி) பெரியீர்; சென்று -நீர் சென்று; சித்திரநளிர்
முடி -
சித்திர வேலைப்பாடமைந்த பெருமை தங்கிய முடியை; நன்று
கவித்தற்கு -
இராமனுக்குநன்றாகச் சூட்டுதற்கு;  வேண்டுவ வரன்முறை 
அமைக்க -
வேண்டுவனவற்றைமுறைப்படி அமைத்திடுக;’  எனச் செப்ப -
என்று சொல்ல.

     இப்பாட்டு,  குளகம்.  இராமனுக்கு முடிசூட்டுதற்கு அமைச்சர்களின்
இசைவைப் பெற்ற  தயரதன், மேற்கொண்டு செய்யவேண்டுவனவற்றைச்
செய்யத் தொடங்கி அரசர்களுக்கு அழைப்பு விடுத்து,  முறைப்படிஆவன
செய்ய வசிட்டனை வேண்டினான்.  அரசர்,  பிறர்க்கு விடுக்கும் ஒலையில்
தன் முத்திரையை இட்டு அனுப்புதல் மரபு.                        72