மன்னர்களிடம் இராமன் முடிபுனைதலைத் தயரதன் தெரிவித்தல் 1386. | உரிய மா தவன் ஒள்ளிது என்று உவந்ததன், விரைந்து ஓர் பொரு இல் தேர்மிசை, அந்தனர் குழாத்தொடும் போக,- ‘நிருபர்! கேண்மின்கள், இராமற்கு நெறி முறைமையினால் திருவும் பூமியும் சீதையின் சிறுந்தன’ என்றான். |
உரிய மா தவன் - முடிசூட்டுதற்கு உரிய பெரிய தவத்தைச் செய்தவனான வசிட்ட முனிவன்;ஒள்ளிது என்று உவந்தனன் - நல்லது என்று சொல்லி மகிழ்ந்தவனாய்; விரைந்து -விரைவாக; ஓர் பொரு இல் தேர்மிசை - ஒப்பற்ற ஒரு தேரில் ஏறி; அந்தணர் குழாத்தொடும் போக - வேதியர் கூட்டத்தோடும் செல்ல; ‘நிருபர் கேண்மின்கள் - (தயரதன் தன்அருகே இருந்த அரசர்களைப் பார்த்து) அரசர்களே! கேளுங்கள்; நெறி முறைமையினால் - அரச நீதி முறைப்படி; இராமற்குத் திருவும் பூமியும் - இராமனுக்கு அரசச்செல்வமும் நாடும்; சீதையின் சிறந்தன - சீதைபோலச் சிறந்தனவாய் உள்ளன;’ என்றான் - என்று சொன்னான். இங்குக் குறிக்கப்படும் அரசர்கள் ஓலை பெற்று வந்தவர் அல்லர்; தயரதன் அருகில் திறை செலுத்தவும், காணவும் வந்தவர்கள் ஆவர். நிருபர், அண்மைவிளி. சீதையின் - ‘இன்’ ஒப்புப்பொருளில்வந்தது; உறழ்ச்சிப் பொருளில் வந்ததாகவும் கொள்ளலாம். 73 |