மன்னர்கள் தயரதன் கருத்தை வரவேற்றல் 1387. | இறைவன் சொல் எனும் இன் நறவு அருந்தினர் யாரும், முறையில் நின்றிலர்; முந்துறு களியிடை மூழ்கி, நிறையும் நெங்சிடை உவகை போய் மயிர் விழி நிமிர, உறையும் விண்ணகம் உடலொடும் எய்தினர் ஒத்தார். |
இறைவன் சொல் எனும் இன் நறவு - அரசனாகிய தயரதன் சொன்ன சொல்லாகிய இனியகள்ளை; அருந்தினர் யாரும் - பருகிய அரசர்கள் முதலிய அனைவரும்; முறையில் நின்றிலர்- முறையில் நில்லாதவர்களாய்; முந்துறு களியிட மூழ்கி - எழுகின்ற களிப்பு என்னும் வெள்ளத்தில் மூழ்கி; நெஞ்சிடை நிறையும் உவகை போய் - தங்கள் மனத்தில் நிறைந்தமகிழ்ச்சியானது கரைகடந்து போய்; மயிர் வழி நிமிர - மயிர்க்கால்களில் வழியேவெளிப்பட; உறையும் விண்ணகம் - உடல் நீங்கியபின் நல்வினை புரிந்த உயிர்கள் சென்றுதங்கும் துறக்கத்தை; உடலொடும் எய்தினர் ஒத்தார் - இவ்வுடம்புடனே அடைந்தவர் போலாயினர். சொல் நறவு - உருவகம், அரசன் சொல்லைக் கேட்டவர் தம் நிலைமறந்து உவகை வெளிப்படப்பெருமகிழ்ச்சியுற்றனர் என்பதாம். ‘உடலொடும் துறக்கம் எய்தினர் ஒத்தார்’ என்னும் உவமைமுன்னும் ‘உடம்பொடு துறக்க நகர் உற்றவரை ஒத்தாதர்’ (1160) என வருதல் காணலாம். உறையும்விண்ணகம் - நல்வினை புரிந்த உயிர் சென்று உறையும் துறக்கம் 74 |