1388. | ஒத்த சிந்தையர் உவகையின் ஒருவரின் ஒருவர் தத்தமக்கு உற்ற அரசு எனத் தழைக்கின்ற மனத்தர்; முத்த வெண்குடை மன்னனை முறைமுறை தொழுதார் ‘அத்த! நன்று’ என, அன்பினோடு அறிவிப்பது ஆனார். |
உவகையின் ஓத்த சிந்தையர் - (அவ்வரசர்கள்) மகிழ்ச்சியினால் இராமபிரான்முடிசூடுதலில் ஒத்த கருத்துடையவர்களாய்; ஒருவரின் ஒருவர் அரசு தம் தமக்கு உற்ற என - ஒருவரைப் போல ஒருவர் அரசு தத்தமக்குக் கிடைத்ததுபோல; தழைக்கின்ற மனத்தர் - மகிழ்ச்சிமிகும் மனமுடையவர்கள்; முத்த வெண்குடை மன்னனை - முத்துகள் பதிக்கப்பட்ட வெண்கொற்றக்குடையையுடைய தயரத மன்னனை; முறை முறை தொழுதார் - வரிசை வரிசையாய் நின்று வணங்கினார்கள்;‘அத்த நன்று என - ஐயனே! தங்கல் கருத்து நல்லதே’ என்று அன்பினோடு அறிவிப்பதுஆனார் - கனிவோடு தங்கள் கருத்தை அவனுக்குத் தெரிவிக்கலாயினர். இராமபிரான் மக்களொடு கலந்து பழகும் நீர்மையுடையவனாதலின் அவனுக்கு அரசு கிடைப்பதைத்தமக்குக் கிடைப்பது போல யாவரும் பாராட்டுவராயினர். சுமந்திரன் இத்தகைய எண்ணமுடையவனாய்இருந்தமை, “தலங்கள் யாவையும் பெற்றனன் தான் எனத் தளிர்ப்பான்” (1361) என்று குறிக்கப்பட்டுள்ளது. 75 |