1392.இவ்வகை உரைசெய இருந்த வேந்து அவை.
‘செவ்வியோய்! நின் திருமகற்குத் தேயத்தோர்
அவ்வவர்க்கு, அவ்வவர் ஆற்ற ஆற்றும்
எவ்வம்இல் அன்பினை, இனிது கேள்’ எனா,

     இவ் வகை உரை செய - (தயரதன் ) இவ்வாறு வினவ;  இருந்த
வேந்து  அவை -
அங்கே இருந்த அரசர் கூட்டம்; செவ்வியோய் -
(தயரதனை நோக்கி) செப்பமுடையோய்!; நின் திருமகற்கு - உன் மகன்மீது;
தேயத்தோர் அவ்வவர்க்கு - அங்கங்கே பற்பலநாட்டில் உள்ளோரும்;
அவ்வவர் ஆற்ற ஆற்றுறும் - அவரவர்களும்  மிகவும்  செய்கின்ற;
எவ்வம் இல் அன்பினை - குறைவில்லாத அன்பினை;  இனிது கேள்
எனா
- இன்பமாகக்கேட்பாய்’  என்று சொல்லி.

     இது முதல் நான்கு பாக்களும் ஒரு தொடர். திருமகற்கு - உருபு
மயக்கம்;  ‘கு’ ஏழனுருபில் வந்தது.                             79