தயரதன் இராமனை மன்னர்க்குக் கையடை ஆக்குதல் 1396. | மொழிந்தது கேட்டலும், மொய்த்து நெஞ்சினைப் பொழிந்த பேர் உவகையன், பொங்கு காதலன், ‘கழிந்தது என் துயர்’ எனக் களிக்கும் சிந்தையன், வழிந்த கண்ணீரினன், மன்னன் கூறுவான். |
மொழிந்தது கேட்டலும் - அவ்வாறு அவையில் இருந்தவர் கூறியதைக் கேட்டவுடனே; மன்னன் - அரசனாகிய தயரதன்; நெஞ்சினை மொய்த்து - மனத்தினில் முழுதும் நிரம்பி;பொழிந்த பேர் உவகையன் - வெளிப்பட்ட மிக்க மகிழ்ச்சியையுடையவனும்; பொங்குகாதலன் - மேலிடுகின்ற அன்பையுடையவனும்; கழிந்தது என்துயர் என - ‘துன்பம் நீங்கியவனானேன்’என்று; களிக்கும் சிந்தையன் - களிப்பை வெளிப்படுத்தும் மனத்தை யுடையவனும்; வழிந்தகண்ணீரினன் - மகிழ்ச்சியால் தானே வழிந்த கண்ணீரையுடையவனுமாகி; கூறுவான் - சொல்வான் ஆயினான். நெஞ்சினை - வேறுமை மயக்கம்; நெஞ்சில் என ஏழாம் வேற்றுமை பொருளது. 83 |