கோசலையிடம் மங்கையர் நால்வர் மகிழ்ச்சியோடு செய்தி சொல்லப்
                                                        போதல்

கலிவிருத்தம்

1399.ஆண்டை அந் நிலை ஆக - அறிந்தவர்,
பூண்ட காதலர், பூட்டு அவிழ் கொங்கையர்,
நீண்ட கூந்தலர், நீள் கலை தாங்கலர்,
ஈண்ட ஓடினர், இட்டு இடை இற்றிலர்.

     ஆண்டை - அரசவையில்;  அந்நிலை ஆக - (தயரதன் மன்னர்
கருத்தை அறிந்துமகிழ்ச்சி  அடைந்து  இராமன் முடிபுனை நாள்
குறித்தற்காகச் சோதிடரை அழைத்துக்கொண்டு மண்டபத்தில்புகுதலாகிய)
அந்த நிலை நடந்துகொண்டிருக்க,  (மங்கையர் நால்வர்);  அறிந்தவர் -
(இராமன்முடிபுனை )  செய்தி அறிந்து;  பூண்ட காதலர் - (இராமன்மேற்)
கொண்ட அன்போடு,  (மகிழ்ச்சிப்பெருக்கால் பருத்து);  பூட்டு அவிழ்
கொங்கையர் -
வார்க்கச்சின் பூட்டு அவிழ்ந்தமார்பகங்களோடும்;  நீண்ட
கூந்தலர் -
அவிழ்ந்து நிலைகுலைந்து நீண்டு வீழ்ந்த கூந்தலோடும்;
நீள்கலை தாங்கலர் - அவிழ்கின்ற ஆடையைத் தாங்கிப் பிடிக்கலாம்; இட்டு
இடை இற்றிலர்-
நுண்ணிய இடை ஒடிந்து விழப் பெறாது;  ஈண்ட -
விரைந்து  (செய்தி சொல்ல);  ஓடினர் - ஓடினார்கள்.

     தயரதன் மன்னர்களோடு கலந்து பேசி முடிபுனை நாள் குறிக்கச்
செல்கிறான்;  அப்போது  அச்செய்திஅறிந்த மங்கையர் நால்வர்
கோசலைபால் செய்திஅறிவிக்க விரைந்து ஓடுகிறார்கள். ‘மங்கையர்நால்வர்’
என்பது அடுத்த பாடலில் வருகிறது.  இங்குக் கொண்டு  வந்து
உரைக்கப்பெற்றது.  இவர்கள்கோசலையின் தோழியர் ஆதல் வேண்டும்.
மகிழ்ச்சிச் செய்தி ஆதலின் அது கேட்டு இவர்கள் உடல்பூரிக்கிறது;  உடல்
பருத்தலின் கொங்கை விம்முகிறது. அதனால் வார்க்கச்சு  பூட்டறுதலும், 
மேகலைநிற்காது அவிழ்ந்து வீழ்தலும் நிகழ்கின்றன. நுண்ணிய
இடையினராய் இவர்கள் விரைந்து  ஓடும்போது இடை ஒடிந்து விழாமல்
இருக்கிறது  என்று நயமாகக் கவிஇயல்பால் குறிப்பிட்டார். கொங்கைவிம்மிப்
புடைத்தலானும்,  விரைந்து இவர்கள் ஓடுதலானும் நுண்ணிய இடை இற்றுப்
போகாதது  வியப்புஎன்று குறித்தார், ‘பூண்ட காதல் அறிந்தவர்’  என
மாற்றிக் கூட்டி,  இராமன்பால் அன்பு பூண்டஅறிந்த மங்கையர் நால்வர்
எனப் பொருள் உரைத்து  மகிழ்ச்சியால் விம்மலின் உடலில் நிற்காது
நெகிழ்கிறதாதலின் ‘தாங்கலர்’ என்று உரைத்தார் என்பதும் உண்டு;
ஏற்குமேல் கொள்க.                                            1