மகிழ்ந்த மங்கையரைக் கோசலை வினாவ, அவர் விடையிறுத்தல்

1401.கண்ட மாதரைக் காதலின் நோக்கினாள்,
கொண்டல் வண்ணனை நல்கிய கோசலை;
‘உண்டு பேர் உவகைப் பொருள்; அன்னது,
தொண்டை வாயினிர்! சொல்லுமின் ஈண்டு!’ என்றான்.

     கொண்டல் வண்ணனை நல்கிய கோசலை - மழை மேகம் போன்ற
திருமேனி உடைய இராமனைப்பெற்ற கோசலை;  கண்ட மாதரை -
(ஆடிப்பாடிக் கரம்சூடிச் சொல்லுவது  ஓராது வந்து)  தன்னைக்கண்ட 
அந்நான்கு பெண்களை; காதலின் - அன்பினால்; நோக்கினாள் - பார்த்து;
‘தொண்டை வாயினிர்! - ஆதொண்டைக் கனிபோன்ற சிவந்த வாயை
உடைய பெண்களே! (உங்களைக்காணுங்கால்); பேர் உவகைப் பொருள் -
பெரிய மகிழ்ச்சிச் செய்தி;  உண்டு- இருக்கிறது (என்று தெரிகிறது); 
அன்னது - அப்படிப்பட்ட மகிழ்ச்சிச் செய்தியை; ஈண்டுச் சொல்லுமின் -
இவ்விடத்தில் சொல்லுங்கள்;’  என்றாள் -  என்று கேட்டாள்.

     கோசலை - கோசல தேசத்தரசன் மகள்.  கோசலம் - இங்குத் தென்
கோசலம். வந்த மங்கையர்கருதிய செய்தியை அவர்கள் கூறாமலே
குறிப்பால் அறிந்தாள், அதனால் ‘உண்டு பேர் உவகைப்பொருள்’ என்றாள்
எனலாம். தன் தோழியர் ஆதலின் அன்போடு நோக்கினாள். இனி ‘இராமன்
தாய்’உலகின் தாய் ஆதலின் அனைவரையும் அன்போடு நோக்கல் அவள்
இயல்பு எனினும் அமையும்.                                     3