1405.மேவி, மென் மலராள், நிலமாது எனும்
தேவிமாரொடும் தேவர்கள் யாவர்க்கும்
ஆவியும், அறிவும், முதல் ஆயவன்
வாவி மா மலர்ப் பாதம் வணங்கினாள்.

     மேவி - (திருமால் கோயிலை) அடைந்து;  மென்மலராள் -
மென்மையான செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள்;  நிலமாது -
பூதேவி;  எனும் - என்கின்ற; தேவிமாரொடும் - இரு தேவியரொடும்; 
தேவர்கள் யாவர்க்கும் - எல்லாத் தேவர்களுக்கும்; ஆவியும் - உயிரும்; 
அறிவும் - ஞானமும்;  முதலும் - ஆதியும்;  ஆயவன் - ஆகிய
திருமாலினது; வாவி மாமலர் - பொய்கையில் பூத்த  பெருமை பெற்ற
தாமரைமலர் போன்ற;  பாதம் - திருவடிகளை;  வணங்கினாள் -
வழிபட்டாள்.

     அன்றலர்ந்த செந்தாமரை மலர்போல உள்ள திருவடி என்பார் ‘வாவி
மா மலர்’ என்றார். மற்றைத் தேவர்களுக்கு உயிராக இருக்கிறான் என்பது.
உயிர்க்கு உயிராய் நின்று உணர்த்துபவன்முதல்வனாகிய இறைவனே
என்பதாம். அறிவாய் நின்று உணர்த்துதலின் ‘அறிவும்’ ஆயவன் என்றார்.
‘ஆவியும் அறிவும் முதலும் ஆயவன்’ என்னாது, ‘முதலாயவன்’ என்றபடியால்,
ஆவி,  அறிவு முதலியவைகளாகஇருக்கின்றவன் என்று பொருள் கூறி,
ஆவி, அறிவு முதலியவைகளாக இருக்கின்றவன் என்று பொருள் கூறி, ஆவி,
அறிவு ஆகிய இரண்டும் ஆக உள்ளபடியால் அவனே முதலும் ஆவான்
என்பது உணரப்படும்.                                           7