கோசலை திருமாலை வணங்குதலும், கோதானம் புரிதலும் 1406. | ‘என்வயின் தரும் மைந்தற்கு, இனி, அருள் உன்வயத்தது’ என்றாள் - உலகு யாவையும் மன்வயிற்றின் அடக்கிய மாயனைத் தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள். |
உலகு யாவையும் - எல்லா உலகங்களையும்; மன் வயிற்றின் - பெருமை பெற்றதன் திருவயிற்றின்கண்ணே; அடக்கிய - அடக்கிக் கொண்ட; மாயனை - திருநாராயணனை; தன் வயிற்றில் - தன்னுடைய வயிற்றிலே; அடக்கும் - அடக்கிய; தவத்தினாள்- தவம் பெற்றவனாகிய கோசலை; ‘என் வயின் தரும் மைந்தற்கு - என்னிட மாகப் பிறந்திடநீ தந்த மைந்தனாகிய இராமனுக்கு; இனி - இப்பொழுது; அருள் - அருளுவது; உன் வயத்தது - உன்னிடத்துள்ளது; (அருள் செய்வாயாக) என்றாள் - என்று பிரார்த்தனைசெய்தாள். ஆதேயமாகிய திருமால் உலகத்தைத் தன்வயிற்றில் அடக்கியவன். ஆதாரமாகிய கோசலைஅவனையே தன்வயிற்றில் அடக்கியவள் என்றார். ஊழிக்காலத்து அப்பெருமான் உறங்கிக் கிடந்தஆலியைப் போலாயிற்று இவள் வயிறு, அவ்வாலிலையில் தன்னிச்சையாலே உறங்கினான் பெருமாள். ஆனால்,இவள் தவத்தாலே இவள் வயிற்றிலே சிக்குண்டு கிடந்தான் என்பதை உணர்ந்த “தவத்தினாள்”என்றார்.மாயன் - மாயம். உடையவன். ‘கூடாதனவற்றைக் கூட்டுவிப்பது’ மாயமாம். இதை ‘அகடித கடநா சாமர்த்தியம்’- கூடாததையும் கூட்டுவிக்கும் திறம் என்பர். இனி ‘மாயன்’ உலக காரணமாகிய ‘பிருகிருதி’(மாயை) யாகத் தான் உள்ளவன் எனத் தத்துவப் பொருள் கூறலும் ஒன்று. 8 |