1408.‘பொருந்து நாள் நாளை, நின் புதல்வற்கு’ என்றனர்,
திருந்தினார்; அன்ன சொல் கேட்ட செய் கழல்
பெருந் திண் மால் யானையான், ‘பிழைப்பு இல் செய்
                                        தவம்
வருந்தினான் வருக’ என, வசிட்டன் எய்தினான்.

     திருந்தினார் - (நூல்களில்) தேறியவர்களாகிய கணித நூல்
அறிஞர்கள்; ‘நின்புதல்வற்கு - உன் மகனுக்கு, (முடி சூட்டுவதற்கு);
பொருந்தும் - பொருத்தமான;  நாள்- நல்ல நாள்;  நாளை -
நாளைக்கேயாகும்;’ என்றனர் - என்று சொன்னார்கள்; அன்ன சொல்
கேட்ட
- அந்த வார்த்தையைக் கேட்ட;  செய்கழல் - புனைந்த
வீரக்கழலணிந்த;  பெருந்திண்மால் யானையான் - பெரிய வலிய
மதமயக்கமுடைய யானையையுடையதயரதன்; ‘பிழைப்பு இல் செய்தவம் -
தவறில்லாத தவத்தைச் செய்து;  வருந்தினான்- வருத்திய மேனி உடைய
வசிட்டன்;  வருக என - வருக’ என்று அழைக்க; வசிட்டன்- வசிட்ட
முனிவன்;  எய்தினான் - வந்து சேர்ந்தான்.

     திருந்தினார் என்றது கற்றறிவில் முற்றத்துறைபோய் அதன் பயனாய்
வாழ்க்கையை முறைப்படுத்திக் கொண்டவர்கள். கடுமையான தவம் செய்தவன்
என்பது தோன்ற ‘செய்தவம் வருந்தினான்’ என்று கூறினார்.            10