இராமன் தன் திருமனையில் வசிட்டனை வரவேற்றல் 1410. | முனிவனும், உவகையும் தானும் முந்துவான், மனுகுல நாயகன் வாயில் முன்னினான்; அனையவன் வரவு கேட்டு, அலங்கல் வீரனும், இனிது எதிர்கொண்டு, தன் இருக்கை எய்தினான். |
முனிவனும் - வசிட்டனும்; உவகையும் தானும் முந்துவான் - தன் மகிழ்ச்சிக்குத்தான் முற்பட்டுச் செல்வானாய்; மனுகுல நாயகன் - வைவஸ்வத மனுவின் வமிசத்தில் தோன்றியஇராமனது; வாயில் - அரண்மனை வாயிலை; முன்னினான் - அடைந்தான்; அனையவன் - அந்த வசிட்டனது; வரவு கேட்டு - வருகையைக் கேள்வியுற்று; அலங்கல் வீரனும் - மாலையணிந்த இராமனும்; இனிது - இனிமையாக; எதிர்கொண்டு -வரவேற்று (அழைத்துக் கொண்டு)தன் இருக்கை - தன் இருப்பிடத்தை; எய்தினான் - அடைந்தான். மனு குலம் - மக்கள் குலம் என்றுமாம். உவகையும் தானும் என்றது வசிட்டனது மகிழ்ச்சியோ,அவனோ முன்னாற் சென்றனர் என அறிய முடியா வண்ணம் ஆர்வத்துடன் விரைவாகச் சென்றான் என்பதாம். பெரியோரை எதிர் கொண்டு அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்தித் தாம் அமர்தல் என்பதுஆன்றோர் ஆசாரம். முந்துவான் - முந்தி - முற்றெச்சம், அலங்கல் - அசைதல் - அத்தொழிலையுடையமாலைக்கு ஆகுபெயர். 12 |