வசிட்டன் இராமனிடம் ‘உனக்கு நாளை முடிசூட்டு விழா’ எனல் 1411. | ஒல்கல் இல் தவத்து உத்தமன், ஓது நூல் மல்கு கேள்விய வள்ளலை நோக்கினான்; ‘புல்கு காதல் புரவலன், போர் வலாய்! நல்கும் நானிலம் நாளை நினக்கு’ என்றான். |
ஒல்கல் இல்தவத்து - தளர்ச்சி இல்லாத தவத்திற் சிறந்த; உத்தமன் -புண்ணியனாகிய வசிட்டன்; ஓதும் நூல் - கற்றற்குரிய நூல்களையும்; மல்குகேள்விய - நிரம்பிய கேள்வியறிவினையும் உடைய; வள்ளலை - இராமனை; நோக்கினான்- பார்த்து; போர்வலாய்! - போரில் வல்லவனே!; புல்கு காதல் புரவலன் -(உன்பால்) நெருங்கிய பிரியத்தை உடைய அரசன் தயரதன்; நினக்கு - உனக்கு; நானிலம்- அரசாட்சியை; நாளை - நாளைக்கு; நல்கும் - தருவான்; என்றான்- என்று சொன்னான். ஒல்குதல் - வளைதல்; இங்கே தவத்துக்கு வளைதல் ஆவது தளர்ச்சியாதலின் தளர்ச்சியில்லாததவம் என்று உரை ஆயிற்று. கற்றறிவாகிய நூற் கல்வியைக் கேள்வி பின்னும் அகலப்படுத்தலான்கேள்வியைப் பின் வைத்தார். கேள்வியாவது - கேட்கப்படும் நூல்களைக் கற்றறிந்தார் கூறக் கேட்டல்.கற்றவழி அதனின் ஆய அறிவை வலியுத்தலானும், கல்லாத வழியும் அதனை உண்டாக்குதலானும் இது கல்வியின்பின்வைக்கப்பட்டது என்ற பரிமேலழகர் உரையை இங்குக் கருதுக. (குறள். 42ஆம் அதிகாரம் முகவுரை). நானிலம் - நால் நிலம் - முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என உலகம் நான்காகப்பகுக்கப்படுதலின் உலகத்தைக் குறிப்பதாயிற்று. பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை. அது ஈண்டு உலகத்தை ஆளும் அரசாட்சியுரிமையைக் குறித்தது. ஆகுபெயர். கேள்விய - கேள்விகளை உடைய - குறிப்புப் பெயரெச்சம். 13 |