1413. | ‘கரிய மாலினும், கண்ணுத லானினும், உரிய தாமரை மேல் உரைவானினும், விரியும் பூதம் ஓர் ஐந்தினும், மெய்யினும், பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால். |
‘அந்தணர் - வேதம் வல்ல வேதியர்; கரிய மாலினும் - கருநிற உருவினனாயதிருமாலைக் காட்டிலும்; கண்ணுதலானினும் - நெற்றிக் கண்ணுடைய சிவபெருமானைக் காட்டிலும்;உரிய தாமரைமேல் உறைவானினும் - தனக்கே உரிய திருவுந்தித் தாமரை மேல் வீற்றிருந்தருளும் பிரமனைக் காட்டிலும்; விரியும் - பரந்து விளங்கும்; ஓர் பூதம் ஐந்தினும்- ஒப்பற்ற பஞ்ச பூதங்களைக் காட்டிலும்; மெய்யினும் - சத்தியத்தைக் காட்டிலும்; பெரியர் - மேம்பட்டவர் ஆவர்; (அவர்களை) உள்ளத்தால் - மனப்பூர்வமாக; பேணுதி - புறந்தருவாயாக.’ மும்மூர்த்திகள் - உலகிற்கு நிமித்த காரணர் - பஞ்சபூதம் உலகிற்கு முதற் காரணம். அவற்றின் வேறுபடாதது உலகம். அதனால், பௌதிகம் எனப்பெயர் பெறும். மெய் - உலகிற்கு அடிப்படையாகிய காரணமாயிருந்து உலகு இயங்கத் துணைபுரிவது ஆதலின் துணைக்காரணம் எனவும் கூறலாம்- இவை அனைத்தினும்அந்தணர் உயர்ந்தோர். முத்தேவர் உயர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்தது; ஆகலின் அவரைவைத்து அந்தணர் உயர்வை எடுத்துக் காட்டினர். ‘உரிய தாமரை’ பலர்க்கு உரியதாகாது அவனுக்கேஉரிய தாமரை. அது திருவுந்தித் தாமரை, மெய்யினும் பெரியர் எனவே அவர்க்கு மெய் இன்றியமையாததுஎன்பதாம். ‘உள்ளத்தால்’ - ஆல் ‘ஒடு’ என்ற உடனிகழ்ச்சிப் பொருளில் வந்துள்ளது. இவ்வுருபு இப்பொருளில் வருவது இலக்கணத்தில் பழைய வழக்கு. பேணுதி - புறந்தருக. அஃதாவது பின்னின்றுகாத்தல்; குழந்தையைத் தாய் காக்குமாறு போலக் காத்தலாம். வேதியர்க்கு இருந்த சமுதாயச் செல்வாக்கினைஉணர்க. இவ்வறவுரை இப்படலத்து முப்பதாம் பாடலில் முடியும். 15 |