1414. | அந்தணாளர் முனியவும், ஆங்கு அவர் சிந்தையால் அருள் செய்யவும், தேவருள் நொந்து உளாரையும், நொய்து உயர்ந்தாரையும், மைந்த! எண்ண, வரம்பும் உண்டாம்கொலோ? |
‘மைந்த! - மகனே!; அந்தணாளர் முனியவும் - வேதியர்கள் வெகுளவும்; அவர் - அவ்வேதியர்; சிந்தையால் - மனத்தோடு பொருந்தி; அருள் செய்யவும்- கருணை புரியவும்; தேவருள் - தேவர்களுள்; நொந்து உளாரையும் - வருத்தம்அடைந்தவர்களையும்; நொய்து உயர்ந்தாரையும் - எளிதாக மேம்பட்டவர்களையும்; எண்ண - கணக்கிட; வரம்பும் உண்டோ - அளவும் இருக்கின்றதோ?’ (இல்லை என்றபடி) தேவர்களில் அந்தணர் சீற்றத்தால் நொந்தோர் பலர்; அந்தணர் கருணையால் மேம்பட்டோர் பலர். எனவே தேவரினும் பெரியர் அந்தணர். ‘நிறைமொழி மாந்தர் பெருமை’ என்னும் குறள்(குறள்.28.) உரையில்; ‘நிறைமொழி - அருளிக்கூறினும், வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி’ என்று பரிமேலழகர் எழுதிய உரையை இங்குக் கருதுக. நொந்துளார். அகத்தியர்சபித்தலால் இந்திர பதவி பெற்ற நகுடன் பாம்பாயினமை காண்க. மேம்பட்டார் - கௌசிக அரசன்,பிரம முனிவனாகி விசுவாமித்திரனாய்ப் புகழ்பெற்றமை வசிட்டன் அருளால் ஆயினமை காண்க. ஆங்கு, ஆம், கொல் என்பன அசைகள். 16 |