1415. அனையர் ஆதலின், ஐய! இவ் வெய்ய தீ -
வினையின் நீங்கிய மேலவர் தாள் இணை
புனையும் சென்னியையாய்ப் புகழ்ந்து ஏத்துதி;
இனிய கூறி நின்று ஏயின செய்தியால்.

    ‘ஐய! - இராமனே; அனையர் ஆதலின் - (அந்தணர்) அத்தன்மையர்
ஆகையால்;  வெய்ய தீவினையின்நீங்கிய - கொடிய தீவினையிலிருந்து
விலகிய;  இம் மேலவர் - இந்த அந்தணரின்; தாள் இணை - திருவடி
இணைகளை;  புனையும் சென்னியையாய் - முடிமேல் சூடிக்கொண்டு;
புகழ்ந்து  ஏத்துதி - புகழ்ந்து துதித்து;  இனிய கூறி - இன்மொழிகளைக்
கூறிஅவர்களை உபசரித்து; ஏயின - அவர்கள் ஏவிய பணிகளை; நின்று -
இருந்து;  செய்தி  - செய்வாயாக.

     அந்தணரிடம் நடந்துகொள்ளவேண்டிய  முறைகளை இங்குக் கூறினார்
வசிட்டர்  என்க.  ‘ஆல்’அசை.                                  17