1417. ‘உருளும் நேமியும், ஒண் கவர் எஃகமும்,
மருள் இல் வாணியும் வல்லவர் மூவர்க்கும்
தெருளும் நல் அறமும், மனச் செம்மையும்,
அருளும் நீத்தபின் ஆவது உண்டாகுமோ?

     ‘உருளும் - (வட்டவடிவாய் இருத்தலின்) உருண்டு  செல்லும்
சக்கரத்தையும்;  ஒண்- ஒள்ளிய;  கவர் எஃகமும் - முக்கிளையாய் உள்ள
வேலாகிய சூலவேலையும்;  மருள் இல்- மயக்கமற்ற;  வாணியும் - சொல்
மகளையும்;  வல்லவர் - உடைமையாகக் கொண்டுவல்லமை பெற்றவராய;
மூவர்க்கும் - முக்கடவுளர்களுக்கும்; தெருளும் - தெளிந்த;நல் அறமும்-
நல்ல தருமமும்;  மனச் செம்மையும் - கோடுதல் இல்லாத நேரியமனமும்;
அருளும் - இரக்கமாய கருணையும்; நீத்தபின் - விட்ட பிறகு;  ஆவது-
நன்மை;  உண்டாகுமோ - உளதாகுமோ?’  (ஆகாது என்றபடி).

     ஆற்றல் படைத்த முத்தேவரும் தம் ஆற்றலால் அன்றி, அறம், நடுவு
நிலைமை,  அருள் என்னும்நற்பண்புகளைக் கொண்டே அனைத்தையும்
சாதிக்க இயலும் என்பதை உணர்ந்து,  நீயும் இம்மூன்றையும் பற்றி  இரு
என்று வசிட்டன் இராமனுக்குக் கூறினன்.  திருவடி சூட்டு படலத்து
வசிட்டன் கூறிய “சீலமும் தருமமும்,  சிதைவில் செய்கையாய்! சூலமும்,
திகிரியும்,  சொல்லும் தாங்கிய - மூவர்க்கு”என்பதை (2447) இங்கு ஒப்பு
நோக்குக.  பிறர் கருவியாற் செய்யும் செயலை, வாய்மொழியைக்கொண்டே
செய்தலின்  ‘வாணியும் வல்லவர்’  என்று  பிரமனைக் கூறினர். ‘வேலன்று
வென்றிதருவது  மன்னவன்,  கோல் அதூஉம் கோடாது எனின்’  என்னும்
குறள் (546.)  இதனோடு ஒத்துக்கருதத் தக்கது.                     19