1418. | ‘சூது முந்துறச் சொல்லிய மாத் துயர், நீதி மைந்த! நினக்கு இலை; ஆயினும், ஏதம் என்பன யாவையும் எய்துதற்கு ஓதும் மூலம் அவை என ஓர்தியே. |
‘நீதி மைந்த - நேர்மையை இயல்பாக உடைய மகனே!; சூது முந்துற - சூதுமுற்பட; சொல்லிய - சொல்லப்பட்ட; மாத்துயர் - பெருங்கேட்டினை விளைக்கும்செயல்கள்; நினக்கு இலை - உன்னிடத்தில் இல்லை; ஆயினும் - ஆனாலும்; அவை - அவைகள்; ஏதம் என்பன யாவையும் - குற்றம் என்று சொல்லப்பட்ட அனைத்தையும்; எய்துதற்கு - ஒருவன் அடைவதற்கு; ஓதும் மூலம் - சொல்லப் பெறும் மூல காரணம்; எனஓர்தி - என்று ஆய்ந்து அறிவாயாக.’ சூது முந்துறச்சொல்லிய மாத்துயர் ஆவன. இன்னவை என்பதை ‘வேட்டம் கடுஞ்சொல், மிகுதண்டம், சூது, பொருளீட்டம், கள் காமம் இவை ஏழு’ என்பதனான் அறிக. இவற்றை வடநூலார் ‘விதனங்கள்’ என்பர். “கடுஞ் சொல்லன் கண்ணிலன் ஆயின், நெடுஞ்செல்வம், நீடு இன்றி ஆங்கே கெடும்” என்னும் குறள் உரையில் (566.) பரிமேலழகர் கூறியவாற்றான் அறிக. இனி சூதாடுதல், வேட்டையாடுதல்,பகலிற்றூங்குதல், வம்பளத்தல், பெண்பித்தனாதல், குடித்தல், பாட்டு, கூத்து, இசைப்பிரியனாதல், ஊர் சுற்றல் என்னும் காமத்தினால் உண்டாக பத்துத் துக்கங்கள் என்பாரும் உளர். சொல்லிய -சொல்லப்பட்டவை எனச் செயப்பாட்டுவினை. துயர் விளைக்கும் செயல்களைத் துயர் என்றது ஆகுபெயர், ‘ஏ’ ஈற்றசை. 20 |