1419. | ‘யாரொடும் பகை கொள்ளலன் என்ற பின், போர் ஒடுங்கும்; புகழ் ஒடுங்காது; தன் தார் ஒடுங்கல் செல்லாது; அது தந்தபின், வேரொடும் கெடல் வேண்டல் உண்டாகுமோ? |
‘(ஒருவன்) யாரொடும் - யார் ஒருவரோடும்; பகை கொள்ளலன் என்றபின் -மாறுபாடு கொள்வதிலன் என்றால்; (அவனுக்குப்) போர் ஒடுங்கும் - சண்டை இல்லாமற்போகும்; புகழ் ஒடுங்காது - புகழ் குன்றாது நிறையும்; தன் - அவனுடைய; தார்- படை; ஒடுங்கல் செல்லாது - கெடாது; அது தந்தபின் - அவ்வாறு படைகெடாது வளருமாயின்; வேரொடும் கெடல் - (அவனைப் பகைக்கும் பகை) அடியோடு அழிதலை; வேண்டல்உண்டாகுமோ? - மட வேண்டிப் பெருதல் உண்டாகுமோ’ (வேண்டாம் தானே நடக்கும்.) யாரொடும் பகைகொள்ளாமல் இருந்தால் புகழ் பெருகும்; படை அழியாது வளரும். எனவேஅவனைப் பகைக்கப் பிறர் நினைக்கினும் அது செய்யார்; அதனால், பகையே இல்லாது ஒழியும். தார்என்பது முன்னணிப் படையைக் குறிக்கும். இங்குப் பொதுவாகப் படை என்னும் கருத்தில் வந்துள்ளது. எல்லாரிடமும் அன்பு செய்தல் ஆக்கம் தரும் என்ற கருத்தினை “பலத்தால் வெல்லப் பட்டபகைவன் சமயம் வாய்த்தபோது கேடு செய்வான்; அன்பால் வெல்லப் பட்ட பகைவன் எப்போதும் கெடுதல் செய்யான் ” ஒஎன்னும் புத்த பகவான் மொழியோடு இணைத்துப் பார்க்கலாம். “ஊருடன் பகைக்கின்வேருடன் கெடும்” என்னும் (கொன்றை. 6.) கருத்தையும் இங்குக் கருதுக. 21 |