1422. | ‘என்பு தோல் உடையார்க்கும், இலார்க்கும், தம் வன் பகைப் புலன் மாசு அற மாய்ப்பது என்? முன்பு பின்பு இன்றி, மூ உலகத்தினும், அன்பின் நல்லது ஓர் ஆக்கம் உண்டாகுமோ? |
‘என்பு தோல் உடையார்க்கும் - எலும்பும் தோலும் உடையார் ஆகி உள்ள முனிவர்களுக்கும்;இலார்க்கும் - அவை இல்லாது தேவசரீரம் பெற்ற தேவர்களுக்கும்; தம் வன்பகைப் புலன் - தம்முடைய வலிய பகையாகிய புலன்களை; மாறசு அற - குற்றம் இல்லாமல்; மாய்ப்பது என்?- அழிப்பது என்ன பயனைத் தரும்; மூ உலகத்தினும் - மூன்று உலகங்களிலும்; முன்புபின்பு இன்றி - தனக்கு மேம்பட்டதும் பிற்பட்டதும் இல்லாமல் சிறந்து நிற்கிற; அன்பின் - அன்பைவிட; நல்லது ஓர் ஆக்கம் - நல்லதாகிய ஒரு செல்வம்; உண்டாகுமோ- உளதாகுமோ’ (இல்லை என்றபடி.) இந்திரிய வசம் செய்வதைவிட அன்புடையராயிருத்தல் யார்க்கும் பெருஞ் செல்வம் ஆகும் என்பதாம். “உரிவை தைஇய ஊன் கெடு மார்பின், என்பு எழுந்து இயங்கும் யாக்கையர்” என்ற (முருகு 12 9 -130) அடிகளையொட்டி ‘என்பு தோல் உடையார்’ என்ற முனிவரரை அறிக. தேவர்கள்புண்ணிய சரீரம் உடையவர், பூதபௌதிக உடம்பு உடையவர் அல்லர் ஆதலின் ‘இலார்க்கும்’ என்றார். ‘முன்பு, பின்பு இன்றி’ இறந்த காலத்தும், எதிர்காலத்தும் இல்லாமல் நிகழ்காலத்தும் அன்பின்நல்ல ஆக்கம் இல்லை என உரைத்து, முக்காலத்திற்கும் ஒப்ப உயர்ந்த ஆக்கம் அன்பே என்றார்எனலும் ஆம். 24 |