1424.‘இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்;
வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்;
நினையும் நீதி நெறி கடவான் எனில்,
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்கொலோ?

     ‘(ஓர் அரசன்)  இனிய சொல்லினன் - (கேட்டார்க்கு) இனிமை
பொருந்தச்சொல்லும்  இன்சொல்  உடையவன்;  ஈகையன் - நல்ல
கொடைத்திறம் உள்ளவன்;  எண்ணினன்- ஆராய்ச்சி உடையவன்; 
வினையன் - முயற்சி உடையவன்; தூயன் - தூய்மையானவன்;விழுமியன்-
சிறந்தவன்;  வென்றியன் - வெற்றி உடையவன்;  நினையும் நீதிநெறி
கடவாதவன் -
ஆராய்ந்து  அறியும் நேர்மையில் சிறிதும் அகலாதவன்;
எனில்- என்றால்;  அனைய மன்னற்கு - அப்படிப்பட்ட அரசனுக்கு;
அழிவும் உண்டாம்கொலோ?- கேடும் உண்டாகுமோ?’ (உண்டாகாது).

     “இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலாற் றான்கண் டனைத்
திவ் வுலகு”,  “கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ் செல்வம்,
நீடின்றி ஆங்கே கெடும்”  என்பனவற்றை(குறள்.  387, 566.) இதனுடன்
ஒப்பிடுக.  ஈகை - வறியராய் வந்து கேட்பவர்களுக்கு இல்லை என்னாது
கொடுத்தல்.  எண் - தான் செய்யும் செயல்களை ஆராய்ந்து  செய்தல்;
காலமும்,  இடனும்,  வலியும்அறிதலும்;  கொடுத்தல்,  இன்சொல்
சொல்லுதல்,  வேறுபடுத்தல்,  ஒறுத்தல்  என்னும்  நால்வகைஉபாயமும்
தெரிந்து செயலும் இதனுள் அடங்கும். வினை என்பது அரசர்க்குரிய போர்த்
தொழிலின்கண்ஊக்கம்.  மேற்சேறல் அரண்முற்றல்,  கோடல்,  பொருதல்,
வேறல்  என்பனவாம்.  நட்பாக்கல், பகையாக்கல்,  மேற்சேறல்,  இருத்தல்,
பிரித்தல்,  கூட்டல்  என்பனவும் ஆகும். எனவே இவற்றைஅறிதற்கும்,
செய்தற்கும் இடைவிடாத மெய்ம்முயற்சி உடையனாதல் வேண்டும் என்க. 26